Sunday, July 7, 2019

ஈசனின் மாறும் வண்ணங்களும் ஈடேறும் எண்ணங்களும்

திருநல்லூர் ஈசன், தனிச் சிறப்புக்குரியவர். இந்த லிங்க ரூபம் பல வண்ணங்களில் தினந்தோறும் தரிசனம் நல்குகிறது. அப்படி மாறும் வண்ணங்கள் நம் எண்ணங்களை, நம் ஏக்கங்களை, நம் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கக் கூடியவை. குறிப்பிட்ட அந்தந்த நேரங்களில் குறிப்பிட்ட வண்ண மாக ஜொலிக்கும் அந்த லிங்கத்தைத் தரிசித்தால் பலன்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சரி, தரிசன நேரம் என்ன, ஈடேறும் பலன்கள் என்ன?

சூரிய உதயமான பின் அன்று காலை 8.24 வரை- உலகைப் புரந்தருளும் தாயுமானவனான ஈசன் தாமரை மலர் வண்ணத்தில் திகழ்கிறார். இந்த நேரத்தில் உளமுருக தரிசனம் செய்து, அபிஷேகம் பார்த்து, அர்ச்சனையும் செய்தால், குழந்தைப் பேறுக்காக ஏங்கும் பெண்களுக்கு நல்ல, ஆரோக்யமான குழந்தை பிறக்கும். 

காலை 8.25 முதல் 10.57 வரை- இந்த உமையொருபாகன், 
இளம் சிவப்பு நிறத்தில் திருக்காட்சி நல்குகிறார். இச்சமயத்தில் திருமணத்துக்காகக் காத்திருப்போரும், தடைகளால் திருமணம் நிறைவேறாமல் தவிப்போரும் இந்த பேரருளாளனை தரிசனம் செய்து, மாலை அணிவித்து உள்ளம் பொங்க அர்ச்சனையும் செய்தால் அவரவர் தகுதிக்கேற்ப, உரிய நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நிறைவேறும்; வாழ்க்கையும் இனிக்கும். 

காலை 11 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை- இந்தக் கயிலைநாதன் உருக்கிய தங்கவண்ணத்தில்ஜொலிக்கிறார். இந்த நேரத்தில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யலாம்; வாசனை திரவியங்களுடன் கூடிய வெந்நீரில் அபிஷேகம் செய்விப்பதும் உண்டு. இப்படி வழிபட்டு மனதாற மகாதேவனை தியானித்தால், #செல்வம், உத்யோகத்தில் உயர்வு, தொழிலில் லாபம், விவசாயத்தில் பயிர் செழிப்பு ஆகிய பலன்கள் கிட்டும். 

பிற்பகல் 1.16 மணி முதல் 3.38 மணி வரை-பச்சை மேனியாள் பார்வதியின் இந்த மணாளன் மரகதப்பச்சை நிறத்தில் பிரகாசிக்கிறார். இச்சமயத்தில் இந்த ஞான முதல்வனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து உள்ளம் நெகிழ வழிபட்டால் படிப்பில் முன்னேற்றம், உயர் கல்வியில் மேன்மை, எதையுமே விரைவாக, எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல், சிறந்த நினைவாற்றல், ஞானவைராக்கியம், எல்லாவற்றிற்கும் மேலாக அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தும் திண்மை எல்லாம் கைவரும்.

பிற்பகல் 3.39 முதல் மாலை 6 மணி வரை-இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வண்ணத்தை இன்ன தென்று விளக்கிச் சொல்ல முடியாததாக இருக்கும். எப்படி அடி, முடி காணப்பட இயலாதவனாக, ஞானப் பிழம்பாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நீக்கமற நிறைந்திருந்தானோ, அதே பிரமிப்புதான் இந்த வண்ணத் தோற்றத்தைக் காணும்போதும் ஏற்படும். 

இச்சமயத்தில் அவரவர் மனதுக்குத் தோன்றக்கூடிய வண்ணக் கண்ணோட்டத்தில் இந்த நாயகனை தரிசித்தால் அதே வண்ணத்தில் அவரவருக்குத் தோற்றம் தரும் அருளாளன் இவன். அதாவது, பக்தர் ஒவ்வொருவரிடமும் அவர் மனதுக்குள் தான் புகுந்துகொள்ளும் பேரருள்!  இந்தப் பலவண்ண தரிசனம், நம் எண்ணங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைக்கும். கேட்ட வரம் கிடைக்கும். பூர்வ ஜென்ம பாவதோஷங்கள், பித்ருசாபம் ஆகியவை அடியோடு நிவர்த்தியாகும்.இந்த பஞ்சவர்ணேஸ்வரர் திருச்சிக்கு அருகே உறையூரில் கோயில் கொண்டிருக்கிறார். கோயில் தொலைபேசி எண்கள்: 0431-2768546, 9443919091, 9791806457.
நன்றி...எஸ்.பவித்ரா
👏👏👏🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

No comments:

Post a Comment

திருக்கண்டியூர்

*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...