Sunday, July 7, 2019

"மூட நெய்பெய்து முழங்கை வழிவார…”

ஸ்ரீராமானுஜர் ஆண்டாளின் மேல் பெரும் பக்தி கொண்டவர். இவருக்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பட்டப் பெயர் கூட உண்டு. இவர் 
திருமாலிருஞ் சோலை கள்ளழகரை சேவிக்க சென்ற போது சுந்தரத் தோளான் முன்பு ஆண்டாளின் நாச்சியார் திருமொழியைச்  சேவித்தார்:

"நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ"

அப்போது அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  சிறுமியான ஆண்டாள்,  பெருமாளுக்கு உண்மையிலேயே நூறு தடா வெண்ணெய் வார்த்து அக்கார அடிசில் செய்வித்து இருப்பாளோ, என்று. இவர்தான் திருப்பாவை ஜியர் ஆச்சே, ஆளைப் பேரைப் பிடித்து இவர் ஆண்டாள் வேண்டிக் கொண்ட பிரகாரம் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தார். 

இதனாலேயே, “பெரும்புதூர் மாமுனிக்கு பின்ஆனாள் வாழியே!” என்று "வாழி திருநாமம்" ஆண்டாள் பற்றி குறிப்பிடுகிறது.  ஒரு அண்ணனாய் இருந்து, ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றியவர், உடையவர். 

இவ்வளவு உருக்கமாக இவர் செய்வித்த காரியம் ஆண்டாளின் மனதை நிறையச் செய்தது. இவர் ஸ்ரீவில்லி புத்தூர் க்ஷேத்திராடணம் செய்ய வந்த போது "அண்ணா!"என்று கூவியவாறு ஆண்டாள் எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம்.  அவள் வந்து இவரை வரவேற்ற இடத்திலேயே ஆண்டாளின் சன்னிதானம் இருப்பதாகவும் ஐதீகம்.

 இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக, உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால்,  பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும்.   இந்த உற்சவம் இப்பொழுதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடம் ஒருமுறை நடந்துவருகிறது.  

இந்த நிகழ்வை "ஸ்ரீரங்கம் கோயிலொழுகு"ம்  உறுதிசெய்கிறது…

 …. உடையவரும் பெரியபெருமாளுடைய அநுமதியுடனே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு சுந்தரத் தோளுடையான் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று  மங்களாசாஸனம் செய்தருளினார். அங்கு ஆண்டாள் விபவாவதாரத்திலே பாரித்தபடி, அக்குடியில் பிறந்த தாம் ஆண்டாளுடைய எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக 100 தடா வெண்ணெய், 100 தடா அக்காரஅடிசில் ஸமர்ப்பித்தருளினார்.

அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்து……ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை, ‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்"

இப்பாசுரத்தில் இன்னும் ரசிக்க வேண்டியிருக்கிறது. 

அக்கார அடிசில் எப்படி இருக்கவேண்டும் ?

"நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…"அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய்,  பாலையெல்லாம் மார்கழி 27ஆம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும்.

அட, அப்படியே அக்கார அடிசிலில் மூட மூட நெய் பெய்தாலும், கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் எப்படி வேகமாக முழங்கை வரை நெய் வழியும் ?  சீக்கிரம் அக்கார அடிசிலை உண்டுவிட்டால், கண்ணன் கிளம்பிவிடுவான் என்று நோன்புப் பெண்கள், சாப்பிடுவது போல் பாசாங்குக்காக அக்கார அடிசிலைக் கையில் எடுப்பார்களாம்.   ஆனால் உடனே சாப்பிட்டுவிடாமல், அவனோடு பேசியே பொழுதை இழுத்தடித்துக் கழிப்பார்களாம். அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்.

"ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment

திருக்கண்டியூர்

*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...