Sunday, April 21, 2019

நவக்கிரக கோயில்களை ஒரே நாளில் சுற்றிப் பார்ப்பது எப்படி
தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.
1, திங்களூர் (சந்திரன்):
நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.
2, ஆலங்குடி (குரு) :
கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம்.
3, திருநாகேஸ்வரம் (ராகு) :
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.
4, சூரியனார் கோவில் (சூரியன்) :
சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7, திருவெண்காடு (புதன்) :
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.
8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
9, திருநள்ளாறு (சனி) :
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்..!!

✼ இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் படித்த பல பட்டதாரிகளும், அவர்களது பெற்றோர்களும் படும் மனவேதனையையும், துன்பங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

✼ நான் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுபவர்களும் வழிபடக்கூடிய ஆலயத்தைப் பற்றி பார்ப்போம்.

ஆலயத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு :

✼ 1000 - 2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஒரு ஸ்தலமாக திகழ்கிறது.

✼ இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார்.

✼ பொதுவாக அனைத்து கோவில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமர்ந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் 'ப" வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

✼ உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

✼ இந்த ஆலயத்தில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்ரமணியராக காட்சி தருகிறார்.

✼ வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு செல்வது சிறப்பு.

✼ திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள்.

✼ சுவாமிக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யுங்கள்.

✼ திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

✼ ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள்.

✼ வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் கொஞ்சம் அன்னதானம் செய்யுங்கள்.

✼ அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரீரங்கம்

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. பெருமை உடைய
(1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்

(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபறி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.
(1) நாழிகேட்டான் கோபுரம்
(2) ஆர்யபடால் கோபுரம்
(3) கார்த்திகை கோபுரம்
(4) ரெங்கா ரெங்கா கோபுரம்
(5) தெற்கு கட்டை கோபுரம்-I
(6) தெற்கு கட்டை கோபுரம்-II
(7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
(1) வசந்த உத்சவம்
(2) சங்கராந்தி
(3) பாரிவேட்டை
(4) அத்யயநோத்சவம்
(5) பவித்ர உத்சவம்
(6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
(1) பூச்சாண்டி சேவை
(2) கற்பூர படியேற்ற சேவை
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
(6) தாயார் திருவடி சேவை
(7) ஜாலி சாலி அலங்காரம்

பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்  

Monday, April 8, 2019

 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், குமாரவயலூர், திருச்சி

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் :

இந்த வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமான் ஒரு உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.

அருணகிரி நாதர் :

  திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் முத்தைத் திரு பாடியபின்பு வயலு}ருக்கு வா என்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதி தான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம்.

வாரியார் சுவாமிகள் :

எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலு}ர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள் வயலு}ரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார். நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலு}ர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.

சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம். மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலு}ரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலு}ர் தலத்திற்கு உண்டு. வயலு}ரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார். அருணகிரி நாதருக்கு கல்யாண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட கல்யாணங்கள் நடைபெறும். திருப்புகழை பாடும் தன்மையை தந்தது வயலு}ர் முருகனே என்பதால் அருணகிரி நாதருக்கு இத்தலத்தில் விஷேச ஈடுபாடு. வாரியார் சுவாமிகளின் தனிப்பட்ட ஈடுபாட்டால் புகழ்பெற்ற முருகன் திருத்தலம்.

சிறப்பம்சங்கள் :

★ முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம்.

Friday, April 5, 2019

தீர்த்தமலை.....சிவன் கோயில்

தர்மபுரி மாவட்டம்... அரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் (அரூரில் இருந்து 16கி.மீ தொலைவில் உள்ள ஊர் தீர்த்தமலை).
மலைகளில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளத்தால் தீர்த்தமலை என பெயர் பெற்ற இடம்.

ராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை..
இங்கு தட்சிணாமூர்த்தி கடவுளே மலை வடிவில் எழுந்தருளி உள்ளார்...

இந்த மலை லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றது ... 
ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.

பூஜைக்காக காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது.
ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது. அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது.

மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணை யாற்றங்கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.
அன்று இராமரால் உருவான தீர்த்தம் இன்று வரை நம் பாவங்களை போக்கவும் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தினசரி பூஜைகளும் உண்டு. தவிர ஆடி அமாவாசை வழிபாடு ..மாசி மாத தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெறும் .... .

தீர்த்தங்கள் : இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும். அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர்.

ராமர் தீர்த்தம் :
(சிவன் கோவிலில் ராமர் பெயரால் தீர்த்தம்!)

மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. இராமனுக்காக அருளப்பெற்று இதில் ராம ஜெயம் என்று முழுகினால் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

குமார தீர்த்தம் :

முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர் என புராணம் கூறுகிறது. முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

கௌரி தீர்த்தம் :

இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்.

அகஸ்தியர் தீர்த்தம் :

 அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் அல்சர் நீங்கி ஜீரண சக்தி கிடைக்கும். வயிற்று வலியும் குணமடையும்.

அக்னி தீர்த்தம் :

அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா அடிக்கடி சளிப்பிடித்தலும் குணமாகும்.....
மலை உச்சியில் இருந்து 24 மணி நேரமும்..365 நாட்களும் தொடர்ந்து தீர்த்தம் கொட்டிக் கொண்டே இருக்கிறது.. பாறைகளில் சுனை நீர் சுரப்பது இயற்கை.. ஆனால் இங்கு 1 இன்ச் பைப் அளவு தீர்த்தம் 25 அடி உயரத்தில் இருந்து கொட்டி கொண்டே இருக்கிறது.

பலர் இந்த தீர்த்தம் எங்கு இருந்து உற்பத்தி ஆகின்றது என கண்டறிய முயன்றும் முடியவில்லை .

1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது. அருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது.
  நோய் தீர்க்கும் மலை: 
சதுரகிரி  மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. 

இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். 

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். 

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். 

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர். 

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. 

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. 

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். 

பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். 

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. 

சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. 

உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 

24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும். 

சதுரகிரி தல வரலாறு : 

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். 

இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. 

மனைவி சடைமங்கை. 

இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். 

ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். 

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். 

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். 

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். 

மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். 

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். 

சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. 

ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். 

இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். 

அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். 

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். 

நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். 

அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். 

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. 

இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். 

செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. 

இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். 

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். 

அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. 

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. 

இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். 

இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. 

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. 

கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். 

சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. 

இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.

பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். 

மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். 

இரட்டை லிங்கம்: 
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். 

இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். 

அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது. 

பிலாவடி கருப்பு: 
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார். 

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது. 

பெரிய மகாலிங்கம்: 
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 

தவசிப்பாறை: 
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். 

இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். 

பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. 

குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். 

இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். 

இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். 

தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. 

அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். 

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' 
என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. 

அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். 

சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. 
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம். 

பார்வதி பூஜித்த லிங்கம் : 
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். 

தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. 

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். 

பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். 

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம். 

கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். 

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 

உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். 

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு. 

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. 

இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள். 

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன. 

அபூர்வ மூலிகைகள் : 
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். 

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. 

இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன. 

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும். 

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும். 

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை. 

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும். 

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும். 

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். 

கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார். 

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். 

இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். 

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை. 

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது. 

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. 

இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். 

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
***************** முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே
திருநெடுங்களநாதர்

அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது.

இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. 

தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது.

இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது.

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. 

காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார்.

இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி பூஜை சிறப்பாக நடக்கும்.

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம் என்றால் “சமவெளியில் அமைந்த பெரிய ஊர்” என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

“தேவாரப்பதிகம் மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.”

-  திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 8வது தலம்.
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:
1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .
அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி
*ஞீலிவனேஸ்வரர் கோவில், திருப்பைஞ்ஞீலி*

*தென்னாடுடைய சிவனே போற்றி*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி*

இத்தலம் திருச்சிக்கு அருகில் சுமார் 12 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளரை என்ற திவ்யதேசம் ஸ்தலம் இங்கிருந்து சுமார் 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பைஞ்ஞீலி, திருப்பைஞ்ஞீலி அஞ்சல், திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம் – 621005.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு* : ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது.

ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது.

இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

*எமன் சந்நிதி* : இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும்.

பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.

இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான்.

இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர்.

சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள்.

சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.

*இராவணன் வாயில்* எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும்.

எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு.

இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள்.

அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.

*திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி* ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார்.

களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர்.

திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.
ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்:

ஜாதகரீதியான மிருத்தியுஞ் செய்ய ஹோமங்களுக்கு கலசங்கள் வைத்து பூஜை செய்து ஹோமங்கள் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பு.

ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.

இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல் பெற்ற தலமாக திகழ்கிறது.

ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தல விருட்சகமாக கொண்டுள்ளது.

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடாத காரணத்தால் சினம் கொண்ட விநாயக பெருமான் இத்திருக்கோயிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் இத்திருக்கோயிலில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) அமிர்தம்+கடம் ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இப்படி செய்த விநாயகர் இத்திருக்கோயிலில் ‘கள்ளவிநாயகர்’ என்று ஒரு தனி சந்நதி பெற்று ‘கள்ளவாரணம்‘ என பெயர் பெற்று அபிராமிபட்டர் மூலமாக ஒரு பதிகம் பாடல் பெற்றார் இவ்விநாயகர்.

இத்தலத்தில் 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும் காரிநாயனார் அருள் பெற்று சிவதொண்டு மேற்கொண்ட தலம் இதுவே. மேலும் சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் ‘தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருள செய்த தலம் இத்தலமே.

ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுமட்டுமல்லாது ஆடிப்பூரம்
தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வைபவம் நடைபெற்று வருவது குறிப்பிடதகுந்த ஒன்றாகும்.

மூலவர் மேற்கே பார்த்தும் அருள்மிகு அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமையப் பெற்றதால் இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாக திகழ்கிறது.

இத்திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம். ஜாதகரீதியான மிருத்தியுஞ் செய்ய ஹோமங்களுக்கு கலசங்கல் வைத்து பூஜை செய்து ஹோமங்கள் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பு.

சித்திரை மாதம் - 18 நாட்கள் மகம் நட்சத்திரத்தன்று எம சம்ஹார திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும்.தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.

புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.

மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பூஜை நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சிறப்புகள் : அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின்போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள்.

அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.

பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோடை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.

அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி, கனகாபிஷேகம் 90 வயது, சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர்.

கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.

திருக்கடையூரில் 60, 80-ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.

தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது. திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.

இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூரத்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார்.

பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை. கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள்.அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.

இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். பிரார்த்தனை சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.

அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.

50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.

இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

ஆலய அமைப்பு :

திருக்கடையூர் கோவில், ஊரின் மையத்தில் வானளாவிய கோபுரங்களுடன் எழிலாகக் காட்சி அளிக்கிறது. மேற்கிலும் கிழக்கிலும் ஆலயத்துக்கு ராஜகோபுர வாயில்கள் இரண்டு அமைந்துள்ளன.

கிழக்கு கோபுரத்தில் முனீசுவரர் குடிகொண்டிருப்பதால் முனீசுவர கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதையட்டி அமுத புஷ்கரணி அமைந்துள்ளது. அமுதகடேஸ்வரர் மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். மேற்குக் கோபுர வாயில் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் இடதுபுறம் ஒரு நூற்றுக்கால் மண்டபம். அதே பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் அபிராமி அன்னைக்கு என தனி ஆலயம் அமைந்துள்ளது. அன்னை அபிராமி எக்கணமும் ஈசனை நோக்கிய வண்ணம் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறாள்.

கர்ப்பக் கிரகத்தில் அன்னையின் தரிசனம் கிடைத்ததும் உடல் சிலிர்க்கிறது. பளபளக்கும் பட்டாடை. மின்னல்களை இறைக்கும் ஆபரணங்கள். தனித்து இருக்கும் சந்நிதியில் அமுதகடேஸ்வரர் உள்ளார். அவரது திருமேனியில் ஒரு பிளம்பும், பாசக்கயிறின் தழும்பும் காணப்படுகின்றன. அமுதகடேஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடக்கும் போது இந்த பாசக்கயிறின் தழும்பினைப் பளிச்சென காணலாம்.
அமுதகடேஸ்வரருக்கு நேர் எதிரில் இருக்கும் கொடிமரத்தில் அருள்மிகு பிள்ளையார் எழில்மிகு கோலத்துடன் காட்சி தருகிறார்.

அவரை அடுத்து அதிகார நந்தி வரவேற்கிறார். நந்தி தேவரை இருகரம் கூப்பித் தொழுது ஆலயத்தில் நுழைய வேண்டும். அவர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால், இடது பக்கம் திரும்பியவுடன் சுப்ரமணியர். அவரை அடுத்து மகாலட்சுமி. இந்த மூன்றாம் பிராகாரத்தில் வில்வவனேஸ்வரர், பஞ்சபூத லிங்கங்கள் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். இவர்களோடு எமன், அறுபத்துமூவர், சப்த மாதர் ஆகியோர் அலங்கரிப்பதும் இந்தப் பிராகாரத்தைத்தான்.

மகா மண்டபத்தில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒருபுறம் அருள்பாலிக்கிறார். இன்னொருபுறம் காலசம்ஹார மூர்த்தி - எமனை எட்டி உதைத்த நிலையில் எழுந்தருளி இருக்கிறார். வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் தாங்கியுள்ளார். இடது திருவடியால் உதையுண்ட எமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கிறார். இடது பக்கத்தில் பாலாம்பிகை திருமகள் கலைமகளாகிய சேடியருடன் விளங்குகிறார்.

எம பயம் போக்கும்கால சம்ஹார மூர்த்தி :

மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் எமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார். வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட எமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்த்தி கிடக்கும் எமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது. இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.

இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாகிய விளங்குகின்றார். இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக எமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார். இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.

கல்வெட்டுகள் :

கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரையில் உள்ள ஒன்பது சோழ மன்னர்களுடைய வரலாற்று குறிப்புகளையும், கொடைத் தன்மையையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். விசயநகர மன்னர்களுள் கிருஷ்ண தேவராயரும், மூக்கண்ண உடையார் பரம்பரையில் விருப்பண்ண உடையாரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

1008 சங்கு அபிஷேகம் :

கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும்.

அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.

கோவிலுக்கு செல்ல வழிகள் :

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு மேற்கு மாவட்டங்களான கோவை,ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்ல வேண்டும்.
சென்னை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் சீர்காழி, சட்டநாதபுரம் வழியாக கோவிலுக்கு செல்லலாம்.

நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து வருபவர்கள் காரைக்கால் வழியாக வர வேண்டும். ரெயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்லலாம்.

திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும், தரங்கம்பாடி, பொறையாரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஸ்ரீ ராகு கோவில்   திருநாகேஸ்வரம்

சுவாமி : அருள்மிகு திருநாகநாத சுவாமி
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அம்பாள் : அருள்மிகு பிறையணியம்மன்.

மூர்த்தி : ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகம், இராகு பகவான்,  சேக்கிழார், பாலறாவாயார், அழகம்மை, அறுபத்து மூவர்.

தீர்த்தம் : 
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது.

தலவிருட்சம் : செண்பகம்.

பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்

வழிபட்டோர் : இராகு பகவான், ஆதிசேஷன், தட்சகன், கார்க்கோடகன், கெளதமர், நந்தி, நளன்,  பராசரர், பகீரதன், சேக்கிழார்.

பாடியோர் : அப்பர், சுந்தரர், சம்பந்தர்.

கோவில் அமைப்பு: 

ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். 

இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்ற பெயர் ஏறபட்டது. 

நாற்புரமும் தேரோடும் வீதிகளுடன், மூன்று பிரகாரங்களையும்,  இரண்டு ஐந்து நிலை கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 

கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி,நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். 

இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.

 புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். 

கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.

பிறையணி அம்மன்

அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. 

சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். 

பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. 

அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து சிரசிற்குச் செல்லும் காட்சி  அற்புதமாகும். 

கார்த்திகை மாதத்து பொர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

கிரி குசாம்பிகை அம்மன்

இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. 

இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். 

இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள்.  தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.

கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும்,சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். 

வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.

பிருங்கி முனிவர்

கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். 

இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும்  பிருங்கி முனிவர் வணங்கி வந்தார். 

இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். 

பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார். 

அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள். 

அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர்

பிருங்கி முனிவர்

ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். 

அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். 

எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. 

தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பின்பு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். 

சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும்,கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். 

தேவியான பார்வதி பூலோகத்தில் செண்பகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். 

இந்தக் கோலத்தையே திருநாகேஸ்வரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.

சேக்கிழார் பெருமான் 

பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கிபி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். 

தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். 

இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். 

ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். 

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. 

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

நூற்றுக்கால் மண்டபம்

சூரிய புஷ்கரிணி தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ஆதிசேஷன்

பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த செண்பகவனம் வந்தான். 

இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். 

ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். 

எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம்.

மங்கள ராகு

நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில்  சிவனை வழிபட தேவியருடன் வந்தார்.  

தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே  மனைவியருடன் தங்கி விட்டார்.  

பிற்காலத்தில்,  கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில்
ராகுவுக்கு இங்கு தனி சன்னதி எழுப்பப்பட்டது.   இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.   

இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு"வாக அருளுவது விசேஷம். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். 

பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார்.
ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். 

தினமும் ராகு காலத்தில் பால் அபிசேகம் மற்றும்  இராகு தோஷ பரிகார பூஜை செய்யப்படுகிறது.

இவருக்கு உகந்த மலர் மந்தாரை.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. 

இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

நவக்கிரகங்களில் ஆற்றல் மிக்கவர், அதிர்ஷ்டக்காரர் என்ற பெயர் பெற்றவர் ராகு. இவருக்கு எந்த வீடும் சொந்தம் இல்லை. சூரிய சந்திரரையும் பலம்  இழக்கச்செய்து கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு, கேதுவுக்கு உண்டு.  எந்த ராசியில் இருக்கிறாரோ, எந்த கிரகத்தால் பார்க்கப்படுகிறாரோ, எந்த இடத்தில் சேர்கிறாரோ  அந்த இடத்தில் முழு பலன்களையும் தரும் அதிர்ஷ்டகாரர் ராகு. ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச்செல்லும் ஆற்றல் ராகுவுக்கு உள்ளது. அதேசமயம், ராகு  தோஷம் உள்ளவர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும்.

சொர்ணபானு ராகுவான கதை

திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்து கொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். 

மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். 

அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 

அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள்.  
அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டுமென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். 

மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களையும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். 

தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். 

இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சக்கரத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். 

அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும்

 சொர்ணபானு

சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன் தான் இந்த சொர்ணபானு.

துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. 

அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். 

இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. 

தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்

நாக அரசனான தக்ககன்

சுசீலர் என்றமுனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியேசென்று கொண்டிருந்தபோது, நாகஅரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது.   இதையறிந்த முனிவர்  கோபம்
 கொண்டார். தன் மகனைத் தீண்டிய தக்ககன் மானிடனாகப் பிறக்கசாபமிட்டார். 

சித்தம் கலங்கியதக்ககன்  , சாபவிமோச்சனம் பெற, காஷ்யப முனிவரை அணுகி ஆலோசனை கேட்டான்.

பூலோகத்தில் லிங்கப்பிரதிஷ்டை செய்து, சிவ பூஜை செய்துவழிபட்டால் சாபம் நீங்கும் என காஷ்யப முனிவர் அருளினார். அவர் சொல் ஏற்று பூலோகம் சென்று, சிவலிங்க பூஜை செய்தான் தக்ககன். 

சிந்தை குளிர்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார்.

இத்தலத்தின் தென்பிரகாத்த்தில் தல விநாயகர்சந்நதி உள்ளது. இவருக்கு “சான்றுவிநாயகர் என்று பெயர்.
நாகராஜன்  சிவனை வழிபட்டதற்கு சான்றாக விளங்கியதால் இவர் சான்று விநாயகர் என்று பெயர்பெற்றிருக்கிறார். இவருக்கு நாகராஜ கணபதி என்ற பெயரும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில  நாகராஜ உருவம் உள்ளது.

கோவிலை வழிபட்டோர்

இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார்.

 நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். 

பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். 

இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான்.

இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான்.

சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில் 
நாகேஸ்வரரையும் (கும்பகோணம்), இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும் (திருநாகேஸ்வரம்) மூன்றாம் 
ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை (நாகப்பட்டினம்)
காரோண்யத்தையும் வழிபட்டால் நிறைந்த பலன் கிடைக்கும்.

ராகு காயத்ரி

நாக த்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராஹூ : ப்ரசோதயாத்
ராகு பகவான் துதிப் பாடல்

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப் 
போகுமக் காலை யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப் 
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் மீண்டும் பெற்ற 
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை சிங்காரவேலர் புறப்பாடு,

வைகாசியில் சேக்கிழார் பூசவிழா,

விசாகப்பெருவிழா,

ஆனித் திருமஞ்சனம்,

ஆடிப்பூரம்,

விநாயக சதுர்த்தி,

நவராத்திரி,

கந்தசஷ்டி விழா,

கார்த்திகைக் கடை ஞாயிறு – பெருவிழா,

மார்கழி – திருவாதிரை,

தை கிரிகுஜாம்பாள் புனுகு காப்புத் திருவிழா,

சிவராத்திரி,

பங்குனி உத்திரம்.

திருக்கண்டியூர்

*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...