ஸ்ரீ ராகு கோவில் திருநாகேஸ்வரம்
சுவாமி : அருள்மிகு திருநாகநாத சுவாமி
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அம்பாள் : அருள்மிகு பிறையணியம்மன்.
மூர்த்தி : ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகம், இராகு பகவான், சேக்கிழார், பாலறாவாயார், அழகம்மை, அறுபத்து மூவர்.
தீர்த்தம் :
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது.
தலவிருட்சம் : செண்பகம்.
பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்
வழிபட்டோர் : இராகு பகவான், ஆதிசேஷன், தட்சகன், கார்க்கோடகன், கெளதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன், சேக்கிழார்.
பாடியோர் : அப்பர், சுந்தரர், சம்பந்தர்.
கோவில் அமைப்பு:
ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார்.
இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்ற பெயர் ஏறபட்டது.
நாற்புரமும் தேரோடும் வீதிகளுடன், மூன்று பிரகாரங்களையும், இரண்டு ஐந்து நிலை கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது.
கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி,நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர்.
இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.
புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும்.
கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.
பிறையணி அம்மன்
அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன.
சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள்.
பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது.
அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து சிரசிற்குச் செல்லும் காட்சி அற்புதமாகும்.
கார்த்திகை மாதத்து பொர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
கிரி குசாம்பிகை அம்மன்
இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது.
இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள்.
இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.
கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும்,சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.
வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.
பிருங்கி முனிவர்
கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர்.
இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் பிருங்கி முனிவர் வணங்கி வந்தார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார்.
பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார்.
அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.
அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர்
பிருங்கி முனிவர்
ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார்.
அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள்.
எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை.
தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பின்பு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார்.
சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும்,கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார்.
தேவியான பார்வதி பூலோகத்தில் செண்பகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர்.
இந்தக் கோலத்தையே திருநாகேஸ்வரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.
சேக்கிழார் பெருமான்
பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கிபி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார்.
தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார்.
இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும்.
ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
நூற்றுக்கால் மண்டபம்
சூரிய புஷ்கரிணி தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆதிசேஷன்
பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த செண்பகவனம் வந்தான்.
இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான்.
ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார்.
எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம்.
மங்கள ராகு
நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார்.
தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார்.
பிற்காலத்தில், கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில்
ராகுவுக்கு இங்கு தனி சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு"வாக அருளுவது விசேஷம். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம்.
பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார்.
ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.
இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.
தினமும் ராகு காலத்தில் பால் அபிசேகம் மற்றும் இராகு தோஷ பரிகார பூஜை செய்யப்படுகிறது.
இவருக்கு உகந்த மலர் மந்தாரை.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது.
இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களில் ஆற்றல் மிக்கவர், அதிர்ஷ்டக்காரர் என்ற பெயர் பெற்றவர் ராகு. இவருக்கு எந்த வீடும் சொந்தம் இல்லை. சூரிய சந்திரரையும் பலம் இழக்கச்செய்து கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு, கேதுவுக்கு உண்டு. எந்த ராசியில் இருக்கிறாரோ, எந்த கிரகத்தால் பார்க்கப்படுகிறாரோ, எந்த இடத்தில் சேர்கிறாரோ அந்த இடத்தில் முழு பலன்களையும் தரும் அதிர்ஷ்டகாரர் ராகு. ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச்செல்லும் ஆற்றல் ராகுவுக்கு உள்ளது. அதேசமயம், ராகு தோஷம் உள்ளவர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும்.
சொர்ணபானு ராகுவான கதை
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்து கொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள்.
மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள்.
அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டுமென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள்.
மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களையும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார்.
தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான்.
இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சக்கரத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார்.
அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும்
சொர்ணபானு
சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன் தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது.
அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான்.
இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது.
தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்
நாக அரசனான தக்ககன்
சுசீலர் என்றமுனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியேசென்று கொண்டிருந்தபோது, நாகஅரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம்
கொண்டார். தன் மகனைத் தீண்டிய தக்ககன் மானிடனாகப் பிறக்கசாபமிட்டார்.
சித்தம் கலங்கியதக்ககன் , சாபவிமோச்சனம் பெற, காஷ்யப முனிவரை அணுகி ஆலோசனை கேட்டான்.
பூலோகத்தில் லிங்கப்பிரதிஷ்டை செய்து, சிவ பூஜை செய்துவழிபட்டால் சாபம் நீங்கும் என காஷ்யப முனிவர் அருளினார். அவர் சொல் ஏற்று பூலோகம் சென்று, சிவலிங்க பூஜை செய்தான் தக்ககன்.
சிந்தை குளிர்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார்.
இத்தலத்தின் தென்பிரகாத்த்தில் தல விநாயகர்சந்நதி உள்ளது. இவருக்கு “சான்றுவிநாயகர் என்று பெயர்.
நாகராஜன் சிவனை வழிபட்டதற்கு சான்றாக விளங்கியதால் இவர் சான்று விநாயகர் என்று பெயர்பெற்றிருக்கிறார். இவருக்கு நாகராஜ கணபதி என்ற பெயரும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில நாகராஜ உருவம் உள்ளது.
கோவிலை வழிபட்டோர்
இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார்.
நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான்.
பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர்.
இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான்.
இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான்.
சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில்
நாகேஸ்வரரையும் (கும்பகோணம்), இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும் (திருநாகேஸ்வரம்) மூன்றாம்
ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை (நாகப்பட்டினம்)
காரோண்யத்தையும் வழிபட்டால் நிறைந்த பலன் கிடைக்கும்.
ராகு காயத்ரி
நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹூ : ப்ரசோதயாத்
ராகு பகவான் துதிப் பாடல்
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகுமக் காலை யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை.
திருவிழாக்கள் :
சித்திரை சிங்காரவேலர் புறப்பாடு,
வைகாசியில் சேக்கிழார் பூசவிழா,
விசாகப்பெருவிழா,
ஆனித் திருமஞ்சனம்,
ஆடிப்பூரம்,
விநாயக சதுர்த்தி,
நவராத்திரி,
கந்தசஷ்டி விழா,
கார்த்திகைக் கடை ஞாயிறு – பெருவிழா,
மார்கழி – திருவாதிரை,
தை கிரிகுஜாம்பாள் புனுகு காப்புத் திருவிழா,
சிவராத்திரி,
பங்குனி உத்திரம்.
No comments:
Post a Comment