Wednesday, October 30, 2019
Sunday, July 7, 2019
ஓதிமலைமுருகன்:
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1880 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.
🌼 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..
🌼சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.
🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ...
போகர் தவம் செய்த பூதிக்காடு:
🌼இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் "விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..
🍁இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.
🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்
படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..
ஓதிமலை குறித்த புராணச் செய்தி :
🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
🍁 படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்” எனப்பட்டது.
🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.
ஒருமுறை சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண கடாட்சியமும் ,அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள்...
திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர்கோவில்.
சோழநாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர்கோவில் முக்கியமானது. இக்கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது.
இத்தல இறைவன் சன்னிதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது.
மகா மண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தருக்கு தனி இடம் உள்ளது. இம் மண்டபத்தில் நடராஜரும் நடனம் புரிகிறார்.
இங்குள்ள முருகன், வள்ளி- தெய்வானையுடன் கையில் வேல் தாங்கி இடது காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. இறைவன் சன்னிதிக்கு இடதுபுறமாக அம்மன் ‘வண்டுசேர் குழலி’யின் சன்னிதி அமைந்துள்ளது.
அம்மை ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் ருத்திராட்ச மாலையும் கொண்டு
வரத ஹஸ்தம்,
அபய ஹஸ்தம்
விளங்க தோற்றம் அளிக்கிறார். நன்றி : மாலை மலர்
ராகுவும், கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு. ராகுவும், கேதுவும் கோவிலில் ஈசானிய மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர்.
திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் நன்றி : மாலை மலர் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.
இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதிசேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.
நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார்.
அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகா பத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆல மர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.
மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திரு நாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.
பரிகார முறை :
ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.
தினமும் கோவிலில் 4 கால பூஜை நடைபெறும். புதன்கிழமை காலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் பூஜை நடைபெறும். மாசிமகம், ராகு, கேது பெயர்ச்சி, மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் நடைபெறும்.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ள திருப்பாம்புரத்துக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வரை ரெயிலில் வந்து அங்கிருந்து பஸ், காரில் கோவிலுக்கு வரலாம். திருவாரூர் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி சாலையில் திருநாகேஸ்வரம், திரு நீலக்குடி வழியாக பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம்.
நன்றி...மாலைமலர்
ஈசனின் மாறும் வண்ணங்களும் ஈடேறும் எண்ணங்களும்
திருநல்லூர் ஈசன், தனிச் சிறப்புக்குரியவர். இந்த லிங்க ரூபம் பல வண்ணங்களில் தினந்தோறும் தரிசனம் நல்குகிறது. அப்படி மாறும் வண்ணங்கள் நம் எண்ணங்களை, நம் ஏக்கங்களை, நம் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கக் கூடியவை. குறிப்பிட்ட அந்தந்த நேரங்களில் குறிப்பிட்ட வண்ண மாக ஜொலிக்கும் அந்த லிங்கத்தைத் தரிசித்தால் பலன்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சரி, தரிசன நேரம் என்ன, ஈடேறும் பலன்கள் என்ன?
சூரிய உதயமான பின் அன்று காலை 8.24 வரை- உலகைப் புரந்தருளும் தாயுமானவனான ஈசன் தாமரை மலர் வண்ணத்தில் திகழ்கிறார். இந்த நேரத்தில் உளமுருக தரிசனம் செய்து, அபிஷேகம் பார்த்து, அர்ச்சனையும் செய்தால், குழந்தைப் பேறுக்காக ஏங்கும் பெண்களுக்கு நல்ல, ஆரோக்யமான குழந்தை பிறக்கும்.
காலை 8.25 முதல் 10.57 வரை- இந்த உமையொருபாகன்,
இளம் சிவப்பு நிறத்தில் திருக்காட்சி நல்குகிறார். இச்சமயத்தில் திருமணத்துக்காகக் காத்திருப்போரும், தடைகளால் திருமணம் நிறைவேறாமல் தவிப்போரும் இந்த பேரருளாளனை தரிசனம் செய்து, மாலை அணிவித்து உள்ளம் பொங்க அர்ச்சனையும் செய்தால் அவரவர் தகுதிக்கேற்ப, உரிய நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நிறைவேறும்; வாழ்க்கையும் இனிக்கும்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை- இந்தக் கயிலைநாதன் உருக்கிய தங்கவண்ணத்தில்ஜொலிக்கிறார். இந்த நேரத்தில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யலாம்; வாசனை திரவியங்களுடன் கூடிய வெந்நீரில் அபிஷேகம் செய்விப்பதும் உண்டு. இப்படி வழிபட்டு மனதாற மகாதேவனை தியானித்தால், #செல்வம், உத்யோகத்தில் உயர்வு, தொழிலில் லாபம், விவசாயத்தில் பயிர் செழிப்பு ஆகிய பலன்கள் கிட்டும்.
பிற்பகல் 1.16 மணி முதல் 3.38 மணி வரை-பச்சை மேனியாள் பார்வதியின் இந்த மணாளன் மரகதப்பச்சை நிறத்தில் பிரகாசிக்கிறார். இச்சமயத்தில் இந்த ஞான முதல்வனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து உள்ளம் நெகிழ வழிபட்டால் படிப்பில் முன்னேற்றம், உயர் கல்வியில் மேன்மை, எதையுமே விரைவாக, எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல், சிறந்த நினைவாற்றல், ஞானவைராக்கியம், எல்லாவற்றிற்கும் மேலாக அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தும் திண்மை எல்லாம் கைவரும்.
பிற்பகல் 3.39 முதல் மாலை 6 மணி வரை-இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வண்ணத்தை இன்ன தென்று விளக்கிச் சொல்ல முடியாததாக இருக்கும். எப்படி அடி, முடி காணப்பட இயலாதவனாக, ஞானப் பிழம்பாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நீக்கமற நிறைந்திருந்தானோ, அதே பிரமிப்புதான் இந்த வண்ணத் தோற்றத்தைக் காணும்போதும் ஏற்படும்.
இச்சமயத்தில் அவரவர் மனதுக்குத் தோன்றக்கூடிய வண்ணக் கண்ணோட்டத்தில் இந்த நாயகனை தரிசித்தால் அதே வண்ணத்தில் அவரவருக்குத் தோற்றம் தரும் அருளாளன் இவன். அதாவது, பக்தர் ஒவ்வொருவரிடமும் அவர் மனதுக்குள் தான் புகுந்துகொள்ளும் பேரருள்! இந்தப் பலவண்ண தரிசனம், நம் எண்ணங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைக்கும். கேட்ட வரம் கிடைக்கும். பூர்வ ஜென்ம பாவதோஷங்கள், பித்ருசாபம் ஆகியவை அடியோடு நிவர்த்தியாகும்.இந்த பஞ்சவர்ணேஸ்வரர் திருச்சிக்கு அருகே உறையூரில் கோயில் கொண்டிருக்கிறார். கோயில் தொலைபேசி எண்கள்: 0431-2768546, 9443919091, 9791806457.
நன்றி...எஸ்.பவித்ரா
👏👏👏🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
அலர்நாதரின் வரலாறு
வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
💐💐💐💐💐💐💐💐💐💐
பக்தி உணர்ச்சியை தூண்டக்கூடிய சின்னஞ்சிறிய இக்கோயில் ஆன்மீக ஏக்கத்தின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
ஜகந்நாத் புரியில் வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்பாக பகவான் ஜகந்நாதர் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் காலம் அனவஸர எனப்படும். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அலர்நாத்தில் தங்கியிருப்பார். தனது அன்பிற்குரிய ஜகந்நாதரின் தரிசனமின்றி பகவான் சைதன்யரால் புரியில் தனிமையில் வசிக்க இயலாது. பகவானை பிரிந்த ஏக்கத்தால் எழும் உயர்ந்த ஆன்மீக உணர்ச்சிகளை அவர் அலர்நாத்தில் வெளிப்படுத்துவார்.
அலர்நாத் திருக்கோயில் புரிக்குப் பதினேழு கிலோ மீட்டர் மேற்கில், கடலுக்கு ஐந்து கிலோ மீட்டர் உட்புற நிலத்தில் அமைந்துள்ளது. . அலர்நாத் செல்வதற்கு பகவான் சைதன்யர் கடற்கரையின் ஓரமாக நடந்து செல்வார், ஆனால் இன்று பெரும்பாலான யாத்திரிகள் பேருந்தில் செல்கின்றனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
பகவான் அலர்நாதர் நான்கு கரங்களுடைய மஹாவிஷ்ணுவாக வீற்றுள்ளார், அவரது வாகனமான கருடன் கைகூப்பி குனிந்து அவரது பாதத்தில் பிரார்த்தனை செய்கிறார், அவரது துணைவியர்களான ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனுறைந்துள்ளனர். இங்கே கிருஷ்ணரின் இராணிகளான ருக்மிணியும் சத்யபாமாவும்கூட சிறிய விக்ரஹத்தில் காட்சியளிக்கின்றனர். மூலஸ்தானத்திற்குச் செல்லும் கூடத்தின் ஒரு கூரையை பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானின் வண்ண ஒவியங்கள் அலங்கரிக்கின்றன.
பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் இராமருடனான பகவான் சைதன்யரின் ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்ரீ சைதன்யரின் ஷட்-புஜ விக்ரஹம் ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இந்த விக்ரஹத்திற்கு முன்புறமுள்ள கல்லில் பகவான் சைதன்யரின் உடல் அங்கங்கள் பதிந்த அடையாளம் காணப்படுகிறது. பகவான் அலர்நாதரின் முன்பு பகவான் சைதன்யர் முதன்முதலாக விழுந்து வணங்கியபோது, அவரது பரவசத்தினால் அந்த கல் உருகியுள்ளது.
ஒடிஸா அரசால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் ஐம்பது குடும்பங்களைச் சார்ந்த பிராமணர்கள் சுழற்சி முறையில் பகவானுக்கு சேவை புரிகின்றனர். பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் பகவானுக்கான ஒரு குறிப்பிட்ட சேவையில் நிபுணர்களாக விளங்கி வருகின்றனர். சிலர் பகவானுக்கு உணவு தயாரிக்கின்றனர், சிலர் சமைத்த உணவைப் படைக்கின்றனர், வேறு சிலரோ, வழிபடுதல், அலங்காரம் செய்தல் போன்ற சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கென்று அறுபது ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது, சில நிலங்கள் பகவானுக்கும் சில நிலங்கள் அவரது சேவகர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆழ்வார்களின் பகவான்
*********
அலர்நாதரின் வரலாறு இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஐதீகம். நான்கு யுகங்களில் முதல் யுகமான ஸத்ய யுகத்தில், பிரம்மதேவரிடம் ஆகாயத்திலிருந்து பேசிய பகவான் நாராயணர், எத்தகைய விக்ரஹத்தை வடித்து வழிபட வேண்டும் என்பதற்கான விளக்கத்தை வழங்கினார்.
“நீங்கள் என்னை இங்கே வழிபட்டதால், இந்த ஸ்தலம் பிரம்மகிரி (பிரம்மாவின் மலை) என்று அழைக்கப்படும்,” என பகவான் நாராயணர் கூறினார்.
காலப்போக்கில், பிரம்மகிரியானது அலர்நாத் என்று அறியப்படத் தொடங்கியது. தற்போதைய கோயில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தமிழகத்தைச் சார்ந்த ஆழ்வார்களின் வழியில் வந்த சில பிராமணர்களால் வழிபடப்பட்டதால், இங்குள்ள பகவான், ஆழ்வார்நாதர் (ஆழ்வார்களின் இறைவன்) என்று அழைக்கப்பட்டார், அப்பெயர் காலப்போக்கில் அலர்நாத் என்று மருவியது. இன்று இந்த ஸ்தலம் பிரம்மகிரி என்றும் பொதுவாகச் சொல்லப்படுகிறது.
சிறுவனின் திருப்திக்காக உணவு உண்ட இறைவன்
💐💐💐💐💐💐💐💐💐
ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் முன்பு உணவை வைத்துவிட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.
முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, பகவானுக்கு உணவு கொண்டு வந்த மது, அதனை படைத்து விட்டு, “எனதன்பு பகவானே, இந்த படையலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சிறுவன் என்பதால் படையலை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது” என்று கூறி பிரார்த்தித்தான்.
அதன் பிறகு, மது தனது நண்பர்களுடன் விளையாடு வதற்காக வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்.
“பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்பட்டால், அவர் என் மீது கோபப்படுவார். தயவுசெய்து சாப்பிடுங்கள்,” என்று அவன் வேண்டினான்.
மீண்டும் வெளியே சென்று திரும்பி வந்த மது, தட்டில் உணவு இன்னமும் அப்படியே இருப்பதைக் கண்டான். அதை உண்ணுமாறு அவன் மீண்டும் பகவானை கண்ணீர் மல்க வேண்டினான்.
மூன்றாவது முறையாக மது திரும்பி வந்தபோது, பகவானின் முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டு காலியாக இருந்தது.
அந்த காலித்தட்டை மது மகிழ்ச்சியுடன் தனது தாயாரிடம் எடுத்துச் சென்றான்.
“பிரசாதம் எங்கே?” அவள் கேட்டாள்.
“அலர்நாதர் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்!” என்று மது பதிலுரைத்தான்.
தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மதுவும் அவனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்தனர்; ஏனெனில், மது எப்போது உணவு படைத்தாலும் பகவான் அதனை முழுவதுமாக சாப்பிட்டு வந்தார்.
ஸ்ரீ கேதனன் திரும்பி வந்து நடப்பவற்றை அறிந்தபோது, தனது மகனைக் கடிந்து கொண்டார்.
“பகவான் அலர்நாதரின் பிரசாதத்தை நீ என்ன செய்தாய்?”
“அவர் சாப்பிட்டு விடுகிறார் தந்தையே. தாங்கள் சொல்லித் தந்தபடியே நான் அவருக்குப் படைத்தேன்.”
“அவர் சாப்பிட்டிருக்க முடியாது. அவர் ஒரு கற்சிலை,” என்று ஸ்ரீ கேதனன் பதிலுரைத்தார்.
இருப்பினும், என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஸ்ரீ கேதனன் விரும்பினார். எனவே, தனது மகன் பகவானுக்கு உணவு படைத்தபோது, அவர் ஒரு தூணிற்குப் பின்னால் மறைந்து கொண்டார். மது சென்ற பின்பு, பகவான் கீழே குனிந்து பாயாசம் இருந்த கிண்ணத்தை எடுப்பதை ஸ்ரீ கேதனன் மறைந்தபடி பார்த்தார். தூணின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ கேதனன், பகவானின் கையைப் பிடிக்க, சூடாக இருந்த பாயாசம் அவரது திருமேனியில் சிந்தியது.
“நிறுத்துங்கள்!” ஸ்ரீ கேதனன் கூக்குரலிட்டார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விக்ரஹம் உணவு உண்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? நீங்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டால், நாங்கள் எவ்வாறு வாழ முடியும்?”
அலர்நாதர் பதிலுரைத்தார்: “பிராமணனின் போர்வையில் உள்ள லௌகீகவாதியே, உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனால் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. எளிமையான முறையில் அன்புடன் அர்ப்பணித்த காரணத்தினால், மது கொடுத்த உணவை நான் ஏற்று வந்தேன்.”
சூடான பாயாசம் பட்டதால், பகவான் அலர்நாதரின் உடலில் ஏற்பட்ட தழும்புகளை கோயிலில் உள்ள பிராமணர்கள் இன்றும் நமக்குக் காட்டுகின்றனர்.
"மூட நெய்பெய்து முழங்கை வழிவார…”
ஸ்ரீராமானுஜர் ஆண்டாளின் மேல் பெரும் பக்தி கொண்டவர். இவருக்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பட்டப் பெயர் கூட உண்டு. இவர்
திருமாலிருஞ் சோலை கள்ளழகரை சேவிக்க சென்ற போது சுந்தரத் தோளான் முன்பு ஆண்டாளின் நாச்சியார் திருமொழியைச் சேவித்தார்:
"நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ"
அப்போது அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. சிறுமியான ஆண்டாள், பெருமாளுக்கு உண்மையிலேயே நூறு தடா வெண்ணெய் வார்த்து அக்கார அடிசில் செய்வித்து இருப்பாளோ, என்று. இவர்தான் திருப்பாவை ஜியர் ஆச்சே, ஆளைப் பேரைப் பிடித்து இவர் ஆண்டாள் வேண்டிக் கொண்ட பிரகாரம் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தார்.
இதனாலேயே, “பெரும்புதூர் மாமுனிக்கு பின்ஆனாள் வாழியே!” என்று "வாழி திருநாமம்" ஆண்டாள் பற்றி குறிப்பிடுகிறது. ஒரு அண்ணனாய் இருந்து, ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றியவர், உடையவர்.
இவ்வளவு உருக்கமாக இவர் செய்வித்த காரியம் ஆண்டாளின் மனதை நிறையச் செய்தது. இவர் ஸ்ரீவில்லி புத்தூர் க்ஷேத்திராடணம் செய்ய வந்த போது "அண்ணா!"என்று கூவியவாறு ஆண்டாள் எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம். அவள் வந்து இவரை வரவேற்ற இடத்திலேயே ஆண்டாளின் சன்னிதானம் இருப்பதாகவும் ஐதீகம்.
இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக, உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால், பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும். இந்த உற்சவம் இப்பொழுதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடம் ஒருமுறை நடந்துவருகிறது.
இந்த நிகழ்வை "ஸ்ரீரங்கம் கோயிலொழுகு"ம் உறுதிசெய்கிறது…
…. உடையவரும் பெரியபெருமாளுடைய அநுமதியுடனே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு சுந்தரத் தோளுடையான் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று மங்களாசாஸனம் செய்தருளினார். அங்கு ஆண்டாள் விபவாவதாரத்திலே பாரித்தபடி, அக்குடியில் பிறந்த தாம் ஆண்டாளுடைய எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக 100 தடா வெண்ணெய், 100 தடா அக்காரஅடிசில் ஸமர்ப்பித்தருளினார்.
அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்து……ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை, ‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்"
இப்பாசுரத்தில் இன்னும் ரசிக்க வேண்டியிருக்கிறது.
அக்கார அடிசில் எப்படி இருக்கவேண்டும் ?
"நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…"அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய், பாலையெல்லாம் மார்கழி 27ஆம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும்.
அட, அப்படியே அக்கார அடிசிலில் மூட மூட நெய் பெய்தாலும், கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் எப்படி வேகமாக முழங்கை வரை நெய் வழியும் ? சீக்கிரம் அக்கார அடிசிலை உண்டுவிட்டால், கண்ணன் கிளம்பிவிடுவான் என்று நோன்புப் பெண்கள், சாப்பிடுவது போல் பாசாங்குக்காக அக்கார அடிசிலைக் கையில் எடுப்பார்களாம். ஆனால் உடனே சாப்பிட்டுவிடாமல், அவனோடு பேசியே பொழுதை இழுத்தடித்துக் கழிப்பார்களாம். அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்.
"ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம்"
பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்கள்:
1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
3. ஹரித்துவாரமங்கலம் (வன்னிவனம்)- உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (பூளை வனம்)- மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
இந்த வரிசைப்படி முதலில்
திருக்கருகாவூர்
கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர் ஆகிய பெயர்களில் இறைவனும், கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி எனும் பெயர்களில் அம்பிகையும் ஒருசேர அருள்புரியும் தலம் திருக்கருகாவூர். தல விநாயகர், கற்பக விநாயகர். தலமரம், முல்லை. க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் இரண்டும் தல தீர்த்தங்கள். பிரம்மன், கௌதமர், சந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம் இது. ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது. முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். கருச்சிதைவுற்றோ அல்லது மகப்பேறின்றியோ வருந்துவோர் இத்தலத்திற்கு வந்து கர்ப்பரட்சாம்பிகையின் சந்நதியில் வழிபட்டு நற்பலன் பெற்று மகிழ்ச்சியடைகிறார்கள். இத்தலத்தை வழிபடுவோர்க்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. பிரசவகால வேதனையும் மிகுதியாவதில்லை. கருவைத் தருவதும், அதைக் காப்பதுமாகிய அருள் வழங்குபவளாக அம்பாள் திகழ்கிறாள். காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.
இக்கோயிலில் ரதவடிவிலான சபா மண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூஜித்த சிவலிங்கமும் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி. மேற்புறம் பிருதிவிபாகம் - புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது. இங்குள்ள நந்தி, உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர். இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, கர்ப்ப ரக்க்ஷாம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்த விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும். கும்பகோணம் - ஆவூர் - மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இக்கோயில். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இரண்டாவது,
திருஅவளிவநல்லூர்
இறைவன் சாட்சிநாதராகவும், இறைவி சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி எனும் பெயர்களிலும் அருளும் தலம் திருஅவளிவநல்லூர்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பெற்ற தலம் இது. பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூஜித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு மகள்கள் இருந்தனர். மூத்த பெண்ணை மணந்தவர் சிறிது காலங்கழித்து, காசியாத்திரை சென்றார். அவர் சென்றிருந்த காலத்தில் அவர் மனைவி அம்மை நோய் கண்டு, அவள் உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். நோய்ப்பட்ட தன் மனைவியின் உருவ மாற்றத்தைக்கண்டு திடுக்கிட்டார். தன் மனைவியின் சாயலில் இரண்டாவது பெண்ணும் இருக்கவே "இவள் என் மனைவியல்ல; இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் தந்தையார் ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார்.
மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பழைய உடல்நலமும், கண்களும் மீளப்பெற்றாள். பிறகு கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். 'அவள் இவள்' என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று. இவ்வாலயத்திற்கு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாளை வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் தரிசனம் தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில், கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறை வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி இருவரும் காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் தனியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
நடரார் சந்நதிக்குப் பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் பேரெழிலுடன் திகழ்கின்றன. எதிரில் நவகிரக சந்நதி. கால பைரவர், சூரியன் போன்றோரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். எதிரில் சண்டேஸ்வரர் சந்நதி. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடு, மற்றும் விவாகரத்துவரை போகக கூடிய பிரச்னை உள்ள தம்பதியர் இத்தலத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் உளமாற வேண்டிக்கொண்டால் அவர்கள் இல்லறம் நல்லறமாக அமையும் கும்பகோணம்-அம்மாபேட்டை மற்றும் தஞ்சாவூர்-அரித்துவாரமங்கலம் வழிகளில் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூருக்கு அழைத்துச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம். மூன்றாவதாக
ஹரித்துவாரமங்கலம்
ஆக்கல் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் யார் புரியும் கர்மா பிரதானமானது என்பதில் விவாதம் உண்டானது. அந்த விவாதத்தின் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் தூணாக ஈசன் வானையும், பூமியையும் ஊருடுவி நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவின் பிரமிப்போடு பார்த்தார்கள். எங்கெல்லாம் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப்பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெதுவும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். அக்னியிலிருந்து குரல் வெளிப்பட்டது: 'என்னுடைய இந்த அக்னி ரூபமான உருவின் அடியையோ, முடியையோ முதலில் யார் காண்கிறார்களோ, அவரே பெரியவர்.' உடனே பிரம்மா பறவையாகப் பறந்தார். பெருமாள், மீண்டும் வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்தார்.
அப்படி ஹரியான விஷ்ணு, வராகராக பூமியை துவாரமிட்டு குடைந்த தலமே அரி துவார மங்கலம் எனும் தலமாகும். ஈசனின் அடியைக் காண பூமியைத் தோண்டி தோல்வியோடு மீண்டும் விஷ்ணு வெளிவந்த தலம் இது தேனொழும் தமிழில் நாயன்மார்கள் திரு அரதைப் பெரும்பாழி என்று இத்தலத்தை அழைத்தனர். சோழர்கள் காலத்தில் நிறைய திருப்பணிகள் கண்ட இந்தக் கோயில் தொன்மையில் மிளிர்கிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரேயே பழமையான திருக்குளம். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம். ஈசனுக்கும், அம்பாளும் தனித்தனி சந்நதிகள். ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி நோக்கி நகர்கிறோம்.
வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருட்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும்
பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும் ரகசியமாகும். கருவறையை விட்டு அம்பாள் சந்நதியை நோக்கி நகர்கிறோம். அம்பாள் தனி அழகோடு மிளிர்கிறாள். நேற்றுதான் திருமணம் முடித்த பெண்போல பேரழகோடு நின்றகோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம் நம்மை நகரவிடாது செய்கிறது. ஜகத்தின் அழகே இவளாததால் அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள்.
திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு சகஜமாக நிகழ்கிறது. அம்பாளை தரிசித்தபின் அருகேயே உள்ள வன்னிமர நிழலில் அமரலாம். மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். ஓய்வெடுப்பதை விட தவம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது. மரம் தரும் நிழல் மற்றும் தென்றல் சுகம் தூக்கத்தை விரட்டி விழிப்பை தருகிறது என்பது அனுபவ உண்மை. கோயில் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். இப்படி வலம் வரும்போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை கண்டு வியக்கலாம். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கலைத்திறனை மெய்மறந்து உணரலாம். ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தின் நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம்.
அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடைப்பட்ட சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று இருவழிகளிலும் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவு. நான்காவதாக
ஆலங்குடி
ஆலங்குடி என்று தற்போது அறியப்படும் இத்தலத்தின் ஆதிகாலைப் பெயர் திருஇரும்பூளை. இறைவன், ஆபத்ஸகாயேஸ்வரர்; இறைவி ஏலவார் குழலியம்மை. இத்தலத்தின் கிழக்கே 'பூளைவள ஆறு' பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜைகாலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. அமுதோகர் என்பவர் சிறந்த சிவபக்தர். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர். ஒருமுறை மன்னர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டார். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினார். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் அந்தத் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு.
மற்றுமொரு புராணச் செய்தியில் தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் குடித்த தலம் இது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே இத்தலம் ஆலங்குடி என்றானது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்கிறார்கள். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கப் பெருமானுக்கு உரியதான ஒன்பது பரிவாரத் தலங்களுள் ஒன்றான ஆலங்குடி, தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது.
நான்கு புறங்களிலும் நீண்ட மதில்களையுடைய ஆலயம் இது. ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுர வாயிலில் உள்ள இத்தல விநாயகர் 'கலங்காமற் காத்த விநாயகர்' என்று பெயர் பெற்றவர். ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியதால் கலங்கிய தேவர்களைக் காத்து அருளியவர். உள்ளே முதல் பிராகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. இதற்குத் தென்புறத்தில் சுந்தரருக்கு ஒரு சந்நதி. உட் பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் ஆகியோரை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமான ஒன்று. சோமாஸ்கந்தர் சந்நதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் மூன்றரையடி உயரம் கொண்டது. ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விஸ்வாமித்திரர் இந்த இறைவனை வழிபட்டுள்ளார். இக்கோயிலில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று ஒரு மரபு உள்ளது. இதனால் பேய், பிசாசு பற்றிய அச்சமும், பாதிப்புகளும் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நதியில் நிவர்த்திப் பரிகாரம் செய்துகொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும் என நம்பிக்கை நிலவுகிறது. இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் வரப்பிரசாதியாக அருளாட்சி புரிகிறார். ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நதி மிகவும் விசேஷமாக வழிபடப்படுகிறது. மகாலட்சுமி தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பேறு பெற்றாள். இந்த தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ்பாடிய மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். வருடா வருடம் குருபெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். கும்பகோணம்-நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. ஐந்தாவதாக
திருக்கொள்ளம்புதூர்
அனைத்து ஆலயங்களிலும் இரவு ஆலயத்தை மூடும் முன் அர்த்தஜாம பூஜையை செய்வது வழக்கம். ஆனால், தீபாவளி அன்று மட்டும் முந்தைய நாள் செய்யவேண்டிய அந்த பூஜையை அதிகாலையில் மேற்கொள்ளும் ஆலயம் திருக்கொள்ளம்புதூர். பிரம்மவனம், காண்டீபவனம் என்னும் பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. அர்ச்சுனன் வழிபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர் எனும் பெயர்களிலும் இறைவி - சௌந்தரநாயகி, அழகு நாச்சியார் எனும் பெயர்களிலும் அருளும் தலம். தலமரம், வில்வம். பிரம்மதீர்த்தம், அகத்திய தீர்த்தம் காண்டிப தீர்த்தம் (அர்ஜுன தீர்த்தம்), முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஆகியன தலதீர்த்தங்களாக விளங்குகின்றன.
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காஸ்யபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் முதலியோர் வழிபட்ட தலம் சுவாமி விபுலானந்தர் அவர்கள்- யாழ் நூலின் ஆசிரியர் பலகாலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ்நூலை அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும். (1947ல்) நகரத்தார் திருப்பணி பெற்றது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்ரமணியர் சுதைத் திருமேனிகள் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நதியைக் காணலாம். இரண்டாம் கோபுரம் ஐந்து நிலைகளையுடையது.
வாயிலில் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டபாணி சந்நதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. கோபுரத்துள் நுழைந்ததும் வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செல்லும் சிற்பத்தைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் வலம் வரும்போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன்-அவன் மனைவி ஆகியோரை தரிசிக்கலாம். அடுத்து ஆறுமுகஸ்வாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவகிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நதிகள் உள்ளன. வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்துள் சென்றால் தெற்கு நோக்கி உள்ளது அம்பாள் சந்நதி. இதற்கு முன்னால் மண்டபத்தின் மேல்விதானத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டிட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மண்டபத் தூண்களின் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். வலப்புறம் திருமுறைக்கோயில் பக்கத்தில் நடராஜசபை. இம்மண்டபத்தில் விநாயகர், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரருக்குத்தனி சந்நதி. இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி 'கொள்ளம்புதூர் உடையார்' என்றும், தேவி 'அழகிய நாச்சியார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள்வழிபாட்டுக்கும் நிவந்தங்கள்விட்ட செய்திகளை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை 'அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்புதூர்' என்று குறிப்பிடுகிறது ஒரு கல்வெட்டு. பல சிவத்தலங்களையும் தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்த ஞானக்குழந்தை திருஞான சம்பந்தர், சம்பிரதாயப்படி முந்தைய நான்கு ஆலயங்களுக்கும் சென்று அந்தந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். ஐப்பசி மாத அமாவாசை நாள் தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார்.
சோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது. ஓடஞ்செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அனைவரும் திகைத்து செய்வதறியாமல் நிற்க, திருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து, கட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார். அந்த அமாவாசை இரவால் பயந்துபோயிருந்த அடியார்களுக்கு ஆறுதல்கூறும் வகையில், 'கொட்டமே கமழும்' எனும் பதிகம் பாடினார். வெள்ளத்தை எதிர்த்து மெள்ள படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்தபோது அதிகாலை ஆகிவிட்டது. திருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தரை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர். அர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்துவிட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர்.
அப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார். அவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது. திருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செல்லும். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரைசேரும். அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார். இந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்கிறது! அன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர். அம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடியார்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக இது துலங்குகிறது.....
👏👏👏🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் !
🌟 பொதுவாக சிவராத்திரி விழா என்றால் சிவன் கோவிலும், நவராத்திரி என்றால் அம்மன் கோவிலும் நினைவிற்கு வரும். ஆனால், சக்தியின்றி சிவன் இல்லை என்ற அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் கிராமத்தில் 64 பரிவார தெய்வங்களுடன் கொலு வீற்றுள்ள காமாட்சியம்மன் கோவிலின் சிறப்புகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மூலவர் : காமாட்சியம்மன்
பழமை : 500 வருடங்களுக்குள்
தல வரலாறு :
🌟 சிதம்பரம் அருகே உள்ள நல்லினம் கிராமத்தில், சில நு}று ஆண்டுகளுக்கு முன் ஒரு பு சாரி குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் வசித்து வந்தார். பின்பு புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண் அங்கிருந்து கைக்குழந்தையாக இருக்கும் மகனையும் தூக்கிக்கொண்டு தான் வழிபட்ட காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் வெளியேறி, தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார் கோவிலுக்கு வந்தாள்.
🌟 அங்குள்ள சில குடுகுடுப்பைக்காரர்கள் அவளை பாதுகாப்பாக ஊருக்குள் அழைத்து வந்தார்கள். பத்து வருடங்களுக்கு பிறகு அவள் மகன் விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி ரசித்துக் கொண்டிருந்தாள்.
🌟 அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை அவனுக்குக் கொடுத்தாள். அச்சமயம் மன்னரின் மனைவிக்கு நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும், நோயை தீர்க்க முடியவில்லை. உடனே அந்த சிறுவன் அரசனிடம் சென்று, காமாட்சியின் அருளுடன் நோய்க்கான காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோயும் குணமானது.
🌟 மகிழ்ச்சி அடைந்த மன்னன், சிறுவனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, தனக்கு ஓர் உடுக்கு பரிசாகத் தர வேண்டும் என்று கேட்டான். அவ்வாறே மன்னரும் செய்தார். காமாட்சியின் அருளால் குறி சொல்லி வந்த அச்சிறுவனின் மரபில் வந்த நான்கு பேர், அவனது அன்னை வணங்கி வந்த காமாட்சிக்கு பிற்காலத்தில் புதுக்கோட்டையில் கோவில் எழுப்பினர்.
தல பெருமை :
🌟 இறைவனின் அருள் வடிவாகிய சக்தியாகிய காமாட்சியம்மன், உயிருள்ள பெண் போல இங்கு அலங்கார கோலத்தில் காட்சியளிக்கிறாள். இறைவனின் அருள் வடிவாக இருப்பவளே சக்தியாகும். அம்மன் கோவில்களில் நவராத்திரியே சிறப்பான ஒன்றாகும். ஆனால், சக்தியின்றி சிவன் இல்லை என்ற அடிப்படையில் இங்கு சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை :
🌟 இக்கோவிலில் திருமணம் நடக்க வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனை செய்வார்கள்.
காசிவிஸ்வநாதர் கோவில், ஊட்டி
✻ நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ளது காந்தல். இங்கு பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் சமாதி அருள் வாய்ந்தது. நீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள சிவாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளனர்.
மூலவர் : காசிவிஸ்வநாதர்
அம்மன் : விசாலாட்சி
புராண பெயர் : திருக்காந்தல்
ஊர் : ஊட்டி
தல பெருமை :
🌟 பாணலிங்கத்திற்கு இயற்கையிலேயே பு ணு}ல் அணிவது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருக்கும். ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம். பாண லிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் பு ஜித்த புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
🌟 மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும்.
தல வரலாறு :
🌟 இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882-ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பு ண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் இஷ்டம் போல் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார். இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.
பிரார்த்தனை :
🌟 இந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்தால் மன அமைதி கிடைக்கிறது என்பது சிறப்பாகும்.
🌟 ஆலயத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதரை மனமுருகி வேண்டினால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
🌟 காசிவிஸ்வநாதருக்கு பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
🌟 விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவையை இந்த கோவிலில் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
சிறப்புகள் :
🌟 இந்த கோவிலில் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
🌟 புத்தாண்டு அன்றும் திருவிழா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
🌟 பிரதோஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டத்துக்கு குறைவில்லை.
🌟 சன்னியாசம் பெற, உபதேசம், ஞானம் பெற இந்த யோக தட்சிணா மூர்த்தியை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பழனியில் முருக பெருமானில் தரிசனத்தில் எது நல்லது ..?இராஜ அலங்காரமா? ஆண்டிக் கோலமா? எது நல்லது!
____________
பழனியில் முருக பெருமானை தரிசிக்க செல்பவர்கள் ஆண்டிக் கோலத்தில் தரிசனம் கிடைத்தால் ஒருவித குழப்பத்தில் ஆழ்கிறார்கள் நாம் எல்லாவற்றையும் இழந்து இந்தமாதிரி ஆண்டி ஆகிவிடுவோமா.?
இதை கடவுள் நமக்கு உணர்த்துகிறார் போல என்று என் நண்பர் ஒருவர் என்னிடம் புலம்பி தீர்த்து விட்டார்..நான் படித்து தெரிந்து கொண்டதை அவருக்கு விபரமாக எடுத்து சொன்னேன்..
சரி நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
சித்தர் பெருமானைப் பற்றி அறிந்து கொண்டவர்கள், போகர் சித்தரை பற்றி நன்கு படித்திருப்போம்.
பழனி முருகனின் சிலையை உருவாக்கியது இவர் தான்.
இவர் மனதில், தன் பயிற்சியில் விளைந்த வித்தைகளைக் கொண்டு, ஒரு யோசனை உதித்தது.
நமக்குப் தெரிந்த சித்த கலைகளை கொண்டு, மனிதர்களுக்கு இறப்பற்ற நிலையை உருவாக்கலாமே என்று நினைத்தார்.
நினைத்ததோடு நிற்காமல் அதற்கான முயற்சி செய்து பயிற்சியிலும் இறங்கினார்.
இதனால், 4,448 மூலிகைளை ஆய்வு செய்தார்.
இந்த மூலிகைக்குள்ளிலிருந்து, உட்படுத்தி அதிலிருந்து 81 பாஷாணங்களை பிரித்தார்.
பின் அந்த 81 பாஷாணங்களிலிருந்து பலவகையான ஆய்வை மேற்கொண்டு, அதிலிருந்து ஒன்பது பாஷாணங்களை பிரித்தெடுத்தார்.
அந்த ஒன்பது பாஷாணங்களையும் மருந்தாக மாற்ற பல வகையான அறிவியலை கையாண்டார்.
ஒருவழியாக மனிதர்களுக்கு இறப்பில்லாத மருந்தை அவர் கண்டறிந்து விட்டார்.
இதை கண்ட மற்ற சித்தர்கள், இது இயற்கைக்கு எதிரானது என்று போகரிடம் கூறினார்கள்.
அதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார்.
ஆனால் அவருக்கோ தன்னுடைய பல வருட உழைப்பை வீணாக்க மனம் இல்லை.
இதனை அடுத்து, தான் செய்த நவபாஷாணத்தில் சில மாறுதல்களை புகுத்தினார்.
அந்த மாறுதலால் நிகழ்ந்தவைகளைக் கொண்டு, அற்புதமான தண்டாயுதபாணி சிலையை உருவாக்கினார்.
அதுவே இன்று பழனியில் இருக்கிறது. இந்த சிலையில் பல அற்புதமான மருத்துவ ரகசியங்கள் அடங்கியுள்ளன.
பழனி முருகனுக்கு செய்யும் அபிஷேக நீரை அருந்துவதினால், இன்றும் தீராத நோய்யெல்லாம் தீர்ந்து போகிறது.
இதனாலேயே நோயாளிகள் பலர் பழனி கோயிலுக்கு வந்து, அபிஷேக தீர்த்தத்தை பெற்று அருந்துவது வழக்கம்.
இன்னொரு செய்தி:
பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஏன்? இது சரியா! தவறா!
அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் அருள்பாலிக்கிறார்.
அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம்.
முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார் என்றால், அப்பா, அம்மா என்பது கூட மாயைதான் என்பதை உணர்த்தக்கூடிய இடம் அது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். அந்த மாதா, பிதா என்பது கூட பொய்தான். அது கூட ஒரு மாயைதான் என்பதை உணர்த்துவதற்காக உருவான அவதாரம்தான் பழனி அவதாரம்.
நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் உணர்த்தவில்லை.
ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தால் நமக்கு உணர்த்தவில்லை.
தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது என்றுதான் அக்கோலத்தால் நமக்கு உணர்த்துகிறார்.
சங்கடங்களை அனுபவித்து, எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம்.
தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.
அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம்.
அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது.
அதாவது பற்றற்று வாழ்தல், சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு. இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம்.
அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.
பழனி முருகனின் ராஜ அலங்காரத்தை பார்த்தால் நல்லது என்றும். ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது கஷ்டம் என்றும் சிலர் சொல்வாருண்டு.
ஆனால் இப்படிச் சொல்வது அது முற்றிலும் தவறு.
இறை தரிசனத்தை பிரித்தெடுத்துப் வகைப்படுத்துவது சரியானதல்ல.
ஏனெனில் நாம் இறைவனை பல தேவைகளுக்காக வேண்டுகிறோம்.
இதில் அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும்.
முற்றும் துறந்தவர்கள், பெரிய பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண ஆர்வமாக இருப்பார்கள்.
நாம சென்ற சமயம், ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு அலங்காரத்தை காணும் பேறு கிடைக்கும்.
இதனால் அடுத்தமுறை செல்லும்போது, இதற்கு முன் காணாத அலங்காரத்தை காண ஆசைப்படுவர்.
மற்றபடி, மன குழப்பம் உடையவர்கள் , வழக்கு நடைபெறும் நிலை, தீராத நோய், வாய் பேச இயலாதவர்கள், பேச்சு குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி இல்லாதவர்கள், மன உளைச்சல் உள்ளவர்கள்,
பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறவர்கள், பத்திரிக்கை அடித்தவர்கள், வீடு வாங்குவது, வீடு கட்டுவது, கிரகப் பிரவேசம் செய்வது, மருத்துவராலும் முடியாதென்ற போன்ற விஷயங்கள் எதுவானாலும்
பழனி முருகனை தரிசிக்க செல்லும் போது எந்த அலங்காரமாக இருந்தாலும், இறைவனை மனதார வழிபட்டு வர எல்லா நலன்களும் கிட்டுமென்பது உண்மை.
முருகா சரணம்.!
கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.!
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.
தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது.
இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. ஆதலால் இக்கோவில் சிவலிங்கை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம்.
இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமலை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.
உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன் என கரிகாலனிடம் சிவன் கூறினாராம். இக்கோவிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார். ஆதிசங்கரர் வந்தார் என்பதற்கு ஆதாரம் தான் அவர் கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம். இக்கோவிலின் சொர்ணபைரவர் தெற்கு பார்த்து இருப்பார். முக்கியமான விஷயம் இது ஒரு கேது ஸ்தலம். மிக மிக மிக அருமையான கோவில். தெய்வமில்லை என்பவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக தெய்வத்தை காணலாம்.🙏🙏🙏.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் !!
தீராத நோய் தீர்க்கும் அற்புதசக்தியாகவே பக்தர்கள் வணங்கி வரும் உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் இருக்கிறாள்.
தல வரலாறு :
ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் இன்றைய தலம் இருக்கும் அடர்ந்த வனத்தில் தவமியற்றினார். அசுரன் கௌமாரியை தூக்கிச் செல்ல முயன்றான். இதனை அறிந்த கௌமாரி, பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச, அது அசுரனை இரு கூறாக பிரித்து அழித்தார். அப்போது தேவர்கள் மலர்மாறி தூவ கௌமாரி இங்கேயே கன்னித்தெய்வமானார். அவர் வழிபட்ட சிவலிங்கத்திற்கு திருக்கண்ணீஸ்வரர் என பெயர் இட்டார்.
தல பெருமை :
வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி நடத்திய போது, ஊழ்வினையால் இரண்டு கண்களும் ஒளி இழக்க நேரிட்டது. மன்னன் இறைவனை வேண்டினான். இறைவனும் மன்னன் கனவில் தோன்றி, இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகை கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு.
உன் கண்கள் இருள் நீங்கி ஒளி பெரும் என்றார். அதேபோல் கௌமாரியை வணங்கிய வீரபாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கிய மன்னன் மறு கண்ணையும் பெற்றார்.
பார்வை பெற்ற மன்னன் கண்ணீஸ்வரருக்கு கற்கோவில் அமைத்து வழிபாடு செய்தான். அதுவே வீரபாண்டி என அழைக்கப்பெற்றது. வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் கௌமாரிபார்க்கும் திசையில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு :
இந்த கோவில் முன் கருப்பண்ணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இதுவே இக்கோவிலுக்கு காவல் தெய்வமாக உள்ளது.
காவல் தெய்வத்தை கடந்து முன்மண்டபம், அதனை அடுத்து கம்பந்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பந்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழா கம்பம் நடப்படுகிறது.
கம்பந்தடி மண்டபத்தை கடந்து மகாமண்டபம் அமைந்துள்ளது. கடந்து முன் செல்லும் கருவறையில் கௌமாரி கன்னி தெய்வமாக காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனைகள் :
கண்நோய், அம்மை நோய், தீராத நோய் கண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்மனை தரிசித்து தீர்த்தமும், அருளும் பெற்று விமோசனம் அடைகின்றனர்.
மேலும் குழந்தை வரம், திருமண யோகம், வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
சிறப்புகள் :
கோவில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
ஓம் நமோ நாராயணாய
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா.. காஞ்சியில் ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் திருவிழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
இதற்கு முன் கடந்த 18.8.1854, 13.6.1892, 12.7.1937, 2.7.1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதரை தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது
சராசரியாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அத்தி வரதர் நீரிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு காட்சியளிக்கிறார் என்பதால், ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, அல்லது அதிகபட்சம் இருமுறை மட்டுமே அத்தி வரதர் பெருமாளை தரிசிக்க முடியும்.
இதன்படி 40 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்
வரதராஜப் பெருமாள் கோயிலின் 100 கால் மண்டபத்தின் அருகில் தண்ணீருக்கு அடியில் உள்ள 4 கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்து வருகிறார். இக்குளத்தில் எப்போதும் நீர் வற்றுவதில்லை என்பதால் அத்தி வரதர் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.
பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அத்தி வரதப் பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து, அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்கள், அத்தி வரதர் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொதுமக்கள் தரிசனத்திற்கு கிழக்கு ராஜகோபுரம் வழியே வந்து, மேற்கு ராஜகோபுரம் வழியே தரிசனம் முடித்து விட்டு வெளியே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்தி வரதர் திருவிழாவையொட்டி காஞ்சி நகர் முழுவதும் சிசிடிவி கேமரா வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
அதே போல திருவிழா நடைபெற உள்ள 48 நாட்களுக்கும், பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரத்தில் செயல்படும் பள்ளிகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட உள்ளது. காலை 8.30 முதல் 1.30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, 5 மொழிகளில் அறிவிப்பு பலகைகளை வைக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தல சிறப்பு:
பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 44 வது திவ்ய தேசம்.
நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம் . இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.
இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்
தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.
பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார்.
பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.
எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு அத்திகிரி என பெயர் வந்ததாம்.
அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்லவேண்டும்.இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.
பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.
அத்தி வரதர் : நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது.அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
வினாடிக்குள் தரிசனம்: வரதருக்கு எடுக்கப்படும் வைகாசி பிரம்மோற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதை, "வையம் கண்ட வைகாசி திருநாள்' என்பர். இவ்விழாவின் 3ம் நாளில் சுவாமி, கருடசேவை சாதிப்பார். இந்த கருட சேவையைக் குறிப்பிட்டு சங்கீத மூர்த்தி தியாகராஜர் கீர்த்தனையும் பாடியுள்ளார். சோளிங்கரில் வசித்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர், இந்த கருடசேவையை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் இங்கு வரமுடியவில்லை. மனம் வருந்திய அவர் சோளிங்கரில் உள்ள தீர்த்தக்கரையில் நின்றபடி, சுவாமியை மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு வினாடி மட்டும் சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கருடசேவையின்போது, இப்போதும் சுவாமியை ஒரு வினாடி குடையால் மறைத்து எடுத்து விடுவர்.
தாயாருக்குரிய உற்சவங்கள்: பிருகு மகரிஷி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய மகாலட்சுமி, பெருந்தேவி தாயார் என்று பெயர் பெற்றாள். சரஸ்வதி பூஜை, வைகாசி திருவிழாவில் ஒருநாள், பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்று முறை மட்டும் வரதராஜர் இவளுடன் சேர்த்திக்காட்சி தருகிறார். வைகாசி முதல் வெள்ளியன்று இவளுக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும்.
மலையாளன்: இந்திரனுக்கு அருளிய யோகநரசிம்மர், இத்தலத்தில் குடவறை மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கான தாயார், ஹரித்ராதேவி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளை மலையாள நாச்சியார் என்றும் அழைப்பர். சிறிய மலையின் மீது காட்சி தருவதால் வரதராஜருக்கு, "மலையாளன்' என்றும் பெயருண்டு.
தங்கத்தாயார்: வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை அவரிடம் பொருள் வேண்டினான். அவர் அந்த ஏழைக்காக பொருள் கேட்டு, பெருந்தேவி தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவருக்கு இரங்கிய தாயார், தங்கமழையை பெய்வித்தாள். இதனால் இவளை பக்தர்கள், "தங்கத்தாயார்' என்று அழைக்கிறார்கள்.
கிணற்றுக்குள் வலம் வரும் சுவாமி: சித்ரா பவுர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். பின்பு, சுவாமி அருகிலுள்ள நடவாவி கிணற்றிற்கு எழுந்தருளுவார். மண்டபம் போன்ற உள்கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான கிணறு இது. இந்நாளில் மட்டும் கிணற்று நீரை வெளியேற்றிவிடுவர். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.
வித்தியாசமான நம்மாழ்வார்: பெருமாள் கோயில்களில், பொதுவாக சின்முத்திரை காட்டியபடி இருக்கும் நம்மாழ்வாரை, இத்தலத்தில் மார்பில் கை வைத்த நிலையில் தரிசிக்கலாம். இவர் வரதராஜரை, "தேவர்களுக்கெல்லாம் தலைவன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் சுவாமிக்கு, "தேவராஜன்' என்ற பெயரும் பெயருண்டு.
வேடர் பெருமாள்: ராமானுஜர் மீது பொறாமை கொண்ட அவரது குரு யாதவப்பிரகாசர், அவரை கங்கையில் தள்ளிவிட வஞ்சகமாக அழைத்துச் சென்றார். இதை, தனது சித்தி மகன் கோவிந்தர்(எம்பார்) மூலமாக அறிந்த ராமானுஜர், பாதியிலேயே திரும்பிவிட்டார். வழி தெரியாத அவர் காட்டுவழியில் கலங்கி நின்றபோது, வரதராஜரும், தாயாரும் வேடர் வடிவில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். ராமானுஜர் அருகிலுள்ள சாலக்கிணற்றில் நீர் எடுத்து அவர்களுக்கு கொடுத்தார். அதைப் பருகியவர்கள் மறைந்து விட்டனர். சுவாமியே வேடனாக வந்ததை ராமானுஜர் அறிந்தார். இதன் அடிப்படையில் சுவாமி நீர் பருகிய கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காலை 6மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.
மார்கழியில் சொர்க்கவாசல் விழா முடிந்த 12ம் நாளில் சுவாமி, தாயார், ராமானுஜர் மூவரும் இந்த கிணற்றிற்கு எழுந்தருளுவர். இவ்வேளையில் சுவாமியின் பரிவட்டமும், மாலையும் ராமானுஜருக்கு அணிவிக்கப்படும். சுவாமிகளுக்கு வேடர் அலங்காரம் செய்யப்படும். பின், ராமானுஜர் சுவாமிக்கு தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடக்கும். இதன்பின்பு சுவாமியும் தாயாரும், கிழக்கு கோபுரம் அருகிலுள்ள ராமானுஜர் வாழ்ந்த வீட்டிற்கு (திருமாளிகை) எழுந்தருளுவர்.
வெள்ளையர் கொடுத்த ஆபரணம்: ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையர், வரதராஜர் மீது கொண்ட பக்தியால் மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தார். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.
அபூர்வ சக்கரத்தாழ்வார்: அனந்தசரஸ் தீர்த்தக்கரையில் சக்கரத் தாழ்வார் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் இட்லி: வல்லபாச்சாரியார் என்ற பக்தர் இங்கு சுவாமிக்கு, மூங்கில் குழாய் கொண்டு தயாரித்த இட்லியை படைத்து வழிபட்டார். இதுவே, "காஞ்சிபுரம் இட்லி' எனப் பெயர் பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இட்லியை காலை 6 மணி பூஜையின்போது நைவேத்யம் செய்கின்றனர்.
மாந்துளிர் உற்சவம்: பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர். பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.
சிறப்புக்கள் சில...
* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.
* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.
* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.
* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.
அதிசயத்தின் அடிப்படையில்: மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சன்னதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
👏👏👏🙏🙏🙏
பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.
ஆகாயத்தில் ஒரு ஆலயம் ! 4560 அடி பர்வதமலை கோயிலின் ரகசியங்கள் !
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதி சிவன் கைலாச மலையிலிருந்து இறங்கி தென் பகுதியில் நுழைந்த போது அவர் முதலில் கால் பதித்தது இங்குதான். அதற்கான தடயங்களாக இறைவனின் பாதங்கள் இங்கு இன்றும் இருக்கின்றன.
இறைவி பார்வதி தேவி தவம் செய்த காரணத்தால் இந்த மலை பர்வதமலை என பெயர் பெற்றது என்றும், மலைகளுக்கெல்லாம் மலையாக மிகுந்த உயரத்தில் இந்த மலை இருப்பதால் இந்த பெயர் வந்ததென்றும் கூறுகிறார்கள்.
பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றாலும் மலைகளுக்கு மேலான மலை என்றும் பொருள்.
இந்த மலை பல்வேறு அமானுஷ்யங்களை மற்றும் வரலாறுகளை தன்னுள் கொண்டுள்ளது. சோழர்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இந்த இடத்தில் ஒரு நகரமே இருந்ததாக கூறப்படுகிறது.
முதலாம் ராஜராஜ சோழரின் அமைச்சரான ஜெயந்தன் பற்றிய பல குறிப்புகள் இங்குள்ள கல்வெட்டில் காணக்கிடைக்கின்றன. இந்த மலையின் உச்சியில் பெரு நகரத்தையே உருவாகியிருக்கின்றனர் சோழர்கள்.
ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவியின் மலையின் சில பாகங்கள் இங்கும் விழுந்துள்ளதாக ஐதீகம்.
திருவண்ணாமலையில் உள்ள கோயில்களில் மிக முக்கியமாக வழிபட வேண்டிய கோயிலாக இந்த கோயில் பார்க்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரமுள்ள இந்த மலையை ஏறி இறைவனை பார்ப்பது என்பது சிவன் மீது தீரா பற்றும் மற்றும் வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தென்பாதி மங்களம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் வழியாக இந்த மலையை சென்றடையலாம்.
மலை ஏறுவதற்கு முன் அங்குள்ள பச்சையம்மனையம் சப்தரிஷிகளையும் வணங்கி விட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயரிடம் ஏறுவதற்கான பலத்தை பிராத்தித்து விட்டு மலை ஏற தொடங்குவது அவசியம்.
கீழே மலையடிவாரத்தை அடையும்போதே நம் கண்களால் அந்த அதிசயத்தை காண முடியும். ஆம். நந்தி தேவரை இதுவரை கோயில்களில் சிவ சந்நிதிக்கு முன்பாக பார்த்திருப்போம்.
இங்கு ஒரு மலையே நந்தி வடிவில் இருந்து சிவனையும் பார்வதியையும் சுமக்கிறது என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த மிக பெரிய ரகசியமாக இருக்க முடியும்.
இந்த கோயிலை சென்று சேர மலை பாதையில் 7கிமி தூரம் நடக்க வேண்டும். செங்குத்தான மலையில் ஏழு கிமி நடப்பது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
யாருக்கும் கிடைக்காத பல அற்புத மூலிகைகள் இந்த 5500 ஏக்கரா காட்டிற்குள் புதைந்து கிடக்கின்றன. இந்த மலையை ஒருமுறை ஏறி வந்தாலே உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
நம் உடலில் உள்ள 7 சக்ரங்களில் கீழிருந்து மேலாக 7வது சக்ரத்தை திறப்பதுதான் முக்தி என கூறப்படுகிறது. அந்த வகையில் 6 மலைகளை கடந்துதான் ஏழாவது மலையான பர்வதமலையை அடைய முடியும். இந்த பர்வதமலைக்கு வந்து போனவர்களுக்கு முக்தி என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
பூமியை விட்டு 4500 அடிக்கு மேல் குடி கொண்டுள்ள அம்மையப்பரின் பெயர் மல்லிகார்ஜுனர், தாய் பிரம்மராம்பிகா. ஸ்ரீசைலம் மலையில் வாழும் அதே சிவனின் பெயர்கள் தான் இங்கும் உள்ளன. அம்மன் வந்து உருவில் வருவதாகவும் தகவல் உண்டு.
இங்குள்ள சக்திகளில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இறைவனையும் இறைவியியையும் உருவாக்கி வழிபட்டவர் சித்தர் போகர்.
போகர் சித்தர் கைகளால் வழிபட்ட சிவனையும் அம்பாளையும் அங்கு செல்லும் பக்தர்கள் அவரவர் கைகளாலேயே வழிபடலாம் என்பது இங்குள்ள விசேஷம்.
இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் மற்ற தெய்வங்களுக்கும் கதவுகள் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடுப்படியாக இந்த கோயில் இருக்கிறது.
ஒருமுறை வந்தாலே நினைத்த வரம் அருளி பக்தனுடன் நிரந்தரமாக வாழ தொடங்கிவிடும் சிவனும் அம்பாளும் அவர்களுக்காக வேண்டி விரும்பி கோயில் திருப்பணியை செய்த அனைவரையும் சும்மாவா விடுவார்கள்.
இந்த திருகாரியத்தில் ஈடுபட்ட அனைவரும் அவர்கள் வாழ்வில் நினைக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளனர்.
திருக்கோயிலை கட்டி முடித்த உடன் சிறிது நாட்களில் உள்ளூர்வாசிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கோயிலை தமிழக அரசாங்கம் எடுத்து கொண்டது.
இன்றளவும் சித்தர்களும் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும் சூட்சு ரூபத்தில் வழிப்படுகின்றனர்.
நந்தியால் சுமக்கப்பட்டுள்ள இறைவனும் இறைவியும் பார்க்கும் அனைவரின் உயிரிலும் கலக்கின்றனர். அதனால்தானோ என்னவோ இந்த கோயிலில் எங்கு திரும்பினாலும் நந்தி சிலைகள்தான் காணப்படுகின்றன.
நந்தியின் பக்தர்கள் அனைவருக்கும் இந்த பர்வதமலை ஒரு காணக்கிடைக்காத சொர்க்கம்தான்.
இங்கு வந்து வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை ஒரே சமயத்தில் அமையும் என்று சிவபெருமானால் அருளப்பட்டுள்ளது.
சிவபக்தர்கள் ஒருமுறை இந்த மலை சென்று வழிபாட்டு வந்தால் கைலாச மலைக்கு செல்லும் பலன் கிடைக்கும். மேலும் கைலாச மலைக்கு செல்வதற்கு முதல்படியாக பர்வதமலை ஏறுவது நன்மை பயக்கும்.
யாரும் வந்து போக முடியாத அடர்வனத்திலும் எந்த விதமான அச்சமுமின்றி இம்மலை ஏற முடியும். அமாவாசை இருளிலும் இங்கு பாதைகள் தெளிவாக கண்ணிற்கு தென்படும். வழி தவறுபவர்களை அங்குள்ள பைரவர்கள் (நாய்கள்) வழிநடத்தி செல்வது இன்றளவும் கண்கூடான உண்மை.
இந்த கோயிலுக்கு செல்லுமுன் அதற்கான விவரங்களை சேகரித்து கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
கூகுளை தேடினால் அதற்கான விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். யூடியூபில் இதன் காணொளிகள் கிடைக்கின்றன. இந்த மலை பற்றிய விவரம் அறிந்தவர்கள் நிச்சயம் ஒருமுறையாவது போக விரும்புவார்கள்.
சிவன் மீது தீராக்காதல் கொண்டவர்கள் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய இடம் இந்த பர்வதமலை. ஒருமுறை சென்றால் பலமுறை நம்மை அழைக்கும் அற்புதமலையும் இதுதான்.
இராமேஸ்வரம்
சுவாமி : இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்.
அம்பாள் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி, விசாலாட்சி, சீதை.
தீர்த்தம் :
கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.
சுவாமி : இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்.
அம்பாள் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி, விசாலாட்சி, சீதை.
தீர்த்தம் :
கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.
தலச்சிறப்பு : இராமநாதசுவாமி திருக்கோவில், இந்துமதக் கோவில்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே இறைவனை வழிபட்ட பெருமை கொண்ட கோவில் ஆகும். இத்தலம் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இராமேஸ்வரம் இராமாயணகால வரலாற்றையுடைய கோவிலாக இருந்தாலும், இந்த கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இத்திருக்கோவிலின் புராணம் மற்றும் கட்டிட வரலாறு என இரண்டுமே சிறப்பானது
இச்சந்நிதியில் சீதாதேவியால்
உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம்.
தினமும் காலை 5.00 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது.
சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள், மிகச் சிறப்பாகக் கருதப்படும் நான்கு தலங்கள், வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவது தலமான ராமநாதம் ஒன்றே சிவதலம் ஆகும். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுவது சிறப்பு.
காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.
இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள இருபத்தி இரண்டு கிணறுகளே அதன் தனிச்சிறப்பு ஆகும். இந்த கிணறுகள் அனைத்தும் இராமரால் உருவாக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது. இராமர் எய்த அம்புகள் விழுந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிணறு உருவானது. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அருகருகே இருந்தபோதும், ஒவ்வொரு கிணற்றின் நீருக்கும் சுவை, நிறம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவை மாறுபடுகிறது. புண்ணிய தீர்த்தங்களான இந்த இருபத்து இரண்டு கிணறுகளிலும் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டால், நமது பாவங்கள் அனைத்தும் கரைந்தோடி நமக்கு மோட்ச ம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தலவரலாறு : இலங்கையில் ராமாயண யுத்தம் முடிந்து, சிவபக்தனான ராவணனை மாய்த்த பின் ராமர் சீதையுடன் திரும்பி வரும் வழியில், இராவண சம்ஹாரத்தினால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார். அகத்திய முனிவர் தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்மஹத்திதோஷம் நீங்குமென்று சொல்ல, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினார். ஆஞ்சநேயர் தனக்கு ஒன்றும், இராமருக்கும் ஒன்றுமாக இரண்டு லிங்கங்களைப் கொண்டு வரும் பொழுது காலதாமதம் ஆனது.
சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் ஆஞ்சநேயர் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். இத்தலத்தில் இராமர் முதலில் பிரதிஷ்டை செய்த இராமலிங்கேஸ்வரரே மூலவராக உள்ளார்.
ஆஞ்சநேயர், தான் வருவதற்குள் மணலால் ஆன ராமலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பெயர்த்து எடுக்க முயன்று, வால் அருந்து சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விழுந்துள்ளார். அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.
இராமபிரான் ஆஞ்சநேயரை சமாதானப்படுத்தி, ஆஞ்சநேயர் கொண்டுவந்த விஸ்வலிங்கத்தை, முதலில் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த விஸ்வலிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது. அனுமன் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இராமநாதர் சன்னதிக்கு இடப்புறம் விஸ்வநாதர் சன்னதி உள்ளது. விசாலாட்சிக்கும் தனி சன்னதி உள்ளது.
கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும். கைலாய மலையிலிருந்து ஆஞ்சநேயர் தனக்காக கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.
இவ்வாறு இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் இராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.
இத்தலமானது மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது. இத்தலத்தில் உள்ள சுவாமிகள் இராமேஸ்வரர், ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
Subscribe to:
Comments (Atom)
திருக்கண்டியூர்
*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...
-
*🚩🔔274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்🌙🔱* *265. திருஅச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்)* *சிவஸ்தலம் பெயர்* *திருஅச்சிறுபாக்கம...
-
தாரமங்கலம்
-
ஈசனின் மாறும் வண்ணங்களும் ஈடேறும் எண்ணங்களும் திருநல்லூர் ஈசன், தனிச் சிறப்புக்குரியவர். இந்த லிங்க ரூபம் பல வண்ணங்களில் தினந்தோறும் த...